திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!
திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை
அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடை அணிந்து,
பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி
கொண்டாட்டத்தில் பட்டாசு மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பட்டாசு வெடித்ததன் காரணமாக திருநெல்வேலி மாநகரத்தின் வீதிகளில் பட்டாசு கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து காட்சியளித்தது.
இதையும் படியுங்கள்: தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!
திருநெல்வேலியின் பல பகுதிகளில் வீட்டின் முன்பு குவியல், குவியலாக பட்டாசு கழிவுகள் குவித்து காணப்பட்டது. அதேபோன்று வீதிகள் முழுமைக்கும் பட்டாசு கழிவுகள் நிறைந்து காட்சியளித்தது. குப்பைகளை அப்புறப்படுத்தும் கடினமான பணியில் திருநெல்வேலி மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதே வேளையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காற்று மாசு இயல்பை விட அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரக் குறியீடு 200 கடந்தால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும். இந்த நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இயல்பை விட காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.