Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!

05:21 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

Advertisement

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12ம் வகுப்பு முடித்த மற்றும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் முளைத்துள்ளன.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த பயிற்சி மையத்தில் படித்து மாணவர்கள் 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிக அளவு மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். சராசரியாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண் - பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வந்துள்ளதாகவும் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக தினமும் தேர்வு, 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு மன அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து, மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை தாக்குதல் அவதூறாக பேசுதல், காலணி கொண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் இந்த சம்பவம் தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத நபர் இதுகுறித்த வீடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை சிஎஸ்ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர் பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுமட்டுமில்லாமல் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் இது தொடர்பாக புகார் சென்ற நிலையில் அவர்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனியார் பயிற்சி மையத்தில் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பயிற்சி மையத்திற்கு அனுப்புவதாகவும் மாணவர்கள் அலட்சியமாக தூங்கியதன் காரணமாகவே அவர்களை பிரம்பால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளை திட்டமிட்டு காலணியால் தாக்கவில்லை என்றும் எதிர்பாராத விதமாக காலணி மாணவிகளின் மீது பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை

இந்நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஜல் நீட் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மாணவர்கள் உடலில் காயம் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்த புகாரை யார் வாபஸ் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், இந்த ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்தார்.

மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து 323, 355, 75jj act, ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார்களுக்கு எதிரான குற்றம், காயப்படுத்துதல் மற்றும் அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
coaching centrecondemnationNEETNellaiNews7Tamiltorture
Advertisement
Next Article