திருநெல்வேலி : குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எறியும் தீ !
திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ராமயம்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாள்தோறும் இங்கு கொட்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் காற்று அதிகமாக வீசப்படும் போது குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வேகமாக பரவியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் திருநெல்வேலி சங்கரன்கோவில் சாலையில் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவு 11 மணிக்கு குப்பை கிடங்கை பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நெல்லை பாளையங்கோட்டை கங்கைகொண்டான் பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஏழு வாகனங்கள் மூலம் விடிய விடிய தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக பொக்லைன் வாகனங்கள் மூலம் மணல்களை பரப்பி தீ மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலைக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல்லை, பேட்டை, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவாமல் இருப்பதற்கு ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல்களை பரப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.