திருநெல்வேலி இருட்டுக்கடை விவகாரம் - மருமகன் தரப்பு வரதட்சணை கேட்கவில்லை என விளக்கம்!
திருநெல்வேலியில் உலக புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் 40 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கனிஷ்காவின் கணவர் வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக கவிதா சிங் திருநெல்வேலி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்த புகார் அனுப்பி வைக்கப்பட்டது.
இருட்டுக்கடை தன் மகன் மீதான குற்றச்சாட்டுக்கு பல்ராம் சிங்கின் தந்தை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்கவில்லை.கேட்கவில்லை. சம்பந்தம் பேசி முடித்த பிறகுதான் அவர்கள் கைக்கு அந்த கடை வந்தது. அதனால் கடையை பார்த்து என் பையனுக்கு திருமண வரன் பேசவில்லை. வீட்டோட மாப்பிளையாக என் மகன் வரமாட்டேன் என கூறியதால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அந்த கடை மீது இந்தியன் வங்கியில் 5 கோடி ரூபாய் கடன் உள்ளது. அவர்கள் வைத்துள்ள 2 காரும் தவணை முறையில் வாங்கியுள்ளார்கள். அதற்கு தவணை கட்ட முடியாமல் கடந்த வாரம் அவர்களின் இன்னோவா காரை விற்றுள்ளார்கள். இது தொடர்பாக மருமகளுக்கும் என் மகனுக்கும் சண்டை பெரிதானது.
மருமகள் தனியாக அந்த கிளாஸுக்கு போகிறேன் இந்த கிளாஸுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே செல்வார். இதை கேட்டால் சந்தேகப்படுகிறீர்களா? என பதில் வரும் இப்படி பிரச்சனை தொடங்கியது. Defender காரை வரதட்சனையாக கேட்டோம் என சொல்கிறார்கள். என்னுடைய பணத்தில்தான் அந்த காரை புக் செய்தேன். அந்த காரை எளிதில் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது. புக் செய்தால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் காரை வாங்க. மருகள் மீதுள்ள தவறை மறைக்க முகாந்திரமில்லாத குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.