"கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது" - ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu
கடந்த ஆட்சியில் தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு , பாமாயில் எண்ணெய் உள்ளிட்டவை கலந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது :
" கடந்த ஐந்தாண்டுகளில் திருமலையில் புனிதமான காரியங்கள் பல நடைபெறவில்லை. பல முறை, பக்தர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதமும், உணவும், பரிசுத்தமான பொருள்களால் தயாரிக்கப்படுபவை, இவை தனி சுவையுடன் இருக்கும்.நான் முதலமைச்சராக இருந்தபோது, ராம்தேவ் பாபாவை இங்கு அழைத்து கோயிலைச் சுற்றி ஆயுர்வேத செடிகள் பல நட்டிருந்தோம். ஆனால், கடந்த ஆட்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான பணி நியமனங்கள் சூதாட்டம் போல நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 1 விசைப்படகுடன் 5 #Tamilnadu மீனவர்கள் கைது!
கோயில் டிக்கெட்டுகளை தங்கள் விருப்பப்படி விற்றுள்ளனர். தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். அதில் ஹிந்துக்கள் அல்லாதோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக திருமலை கோயில் தேவஸ்தானத்தை பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகவே, கலப்படமான நெய் லட்டு தயாரிக்க வழங்கப்பட்டுள்ளது”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.