விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில் : பௌர்ணமி, ஞாயிறையொட்டி குவிந்த பக்தர்கள் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
கோயிலானது, முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் பௌர்ணமி தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்தனர்.
தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. இதனையடுத்து 3-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று, அதன்பின் மற்ற கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரமும், ரூ.100 கட்டன தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கிரி பிரகாரங்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் கோயில்
திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.