திருச்செந்தூர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனி உத்திர வருஷாபிஷேகம்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர வருஷாபிஷேகம் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். வருடம் இருமுறை வருஷாபிஷேகம் நடைபெறும்.
தை மாதம் மூலவர் பிரதிஷ்டை தின தை உத்தர வருஷாபிஷேகமும், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி உத்திர தினத்தன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி உத்திர நாளான இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது.
வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு காலை 9.00 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேக செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி தெய்வானை விமான கலசத்திற்கும் , அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.