திருச்செந்தூர் ஆவணித் திருவிழா - கோயில் யானை மீது எடுத்துச் செல்லப்பட்ட கொடிப்பட்டம்!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடிப்பட்டம், கோயில் யானை மீது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா நாளை காலை
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர்.
இந்நிலையில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. இதனையொட்டி, திருச்செந்தூர் வடக்கு
ரதவீதியில் உள்ள 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடிபட்டத்திற்கு சிறப்பு
பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் யானை தெய்வானை மேல் கொடிப்பட்டமானது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த கொடிப்பட்ட ஊர்வலமானது தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, உள்ளிட்ட 8
வீதிகளிலும் உலா வந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது . இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.