#Tiruchendur ஆவணி தேரோட்டம் கோலாகலம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற நிலையில், தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா ஆகஸ்ட் - 24ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து செப்டம்பர் 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை என இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர். இதையடுத்து, ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 30ம் தேதி சிவப்பு சாத்தியும், 31ம் தேதி பச்சை சாத்தியும் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6.35 மணியளவில் பிள்ளையார் தேர், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், மற்றும் வள்ளியம்மன் தேர்கள் நான்கு ரதவீதிகள் வழியாக வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் அஜித், செந்தில்வேல்முருகன், முத்துமாரி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “வாஞ்சையோடு என்னை அணைத்துக் கொள்ளும் நம் உறவுகள்” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
பாதுகாப்பு பணியில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மு.வசந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.