திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு பிறப்பு தினத்தை முன்னிட்டு அதிகாலை 01:00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 01:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 02:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும் இந்த விஸ்வரூப தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதலே கோவிலில் குவிந்திருந்தனர். கோயில் நடை திறக்கப்பட்டதும் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட முந்தி அடித்துக் கொண்டு சென்றனர்.
மேலும் ஆண்டின் முதல் நாளான இன்று சாமி தரிசனம் செய்தால் ஆண்டிற்கான மொத்த பலனும் கிடைக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர் . இதனால் கோவிலில் தரிசனத்திற்கு செல்லக்கூடிய வழிகளான 100 ரூபாய் கட்டண தரிசனம், இலவச தரிசனம் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் செல்லக்கூடிய வழிகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.