லைவ்-ன் போது டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை.. மெக்சிகோவில் அதிர்ச்சி!
மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார். இதில் படுகாயமடைந்த வலேரியா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின்னர் பெண் ஒருவர் அந்த லைவை கட் செய்தார். அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் பதிவானது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லைவில் பதிவான பெண் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
ஒரு சமூக ஊடக பயனர் ஒருவர் வீடியோவில் பதிவான அந்தப் பெண்ணின் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு, “பிரபலமான வலேரியா மார்க்வெஸ் கொலை செய்யப்பட்ட வீடியோவின் இறுதியில் தோன்றும் இந்தப் பெண் யார்? வலேரியாவிற்கு உதவ முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒன்றுமில்லாதது போல, அவர் தொலைபேசியை எடுத்து லைவை கட் செய்வது என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது" என பதிவிட்டிருந்தார்.
"முதற்கட்ட விசாரணையின்படி, வலேரியா தனது அழகு நிலையத்தில் இருந்தபோது ஒரு நபர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டு, அவரைக் கொன்றதாகத் தெரிகிறது" என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கி ஏந்திய ஒருவர் அவரது சலூனுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வலேரியா மார்க்வெஸ் யார்?
ஜாலிஸ்கோவின் குவாடலஜாராவைச் சேர்ந்தவர் வலேரியா மார்க்வெஸ் (23). இவர் அழகியல் நிபுணர் ஆவார். டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 90,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை வைத்திருந்தார். 2002 இல் பிறந்த இவர், 2021 இல் மிஸ் ரோஸ்ட்ரோ அழகுப் போட்டியை வென்றார். ஜாலிஸ்கோவின் சபோபனில் உள்ள சாண்டா மரியா ஷாப்பிங் பிளாசாவில் மார்க்வெஸ் ஒரு அழகு நிலையத்தை நடத்தி வந்தார்.