ஏரல் பகுதியில் மின் விநியோகம் சரி செய்யப்படாததால், மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்தும் பொதுமக்கள்!
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மின் விநியோகம் முழுமையாக சரி செய்யப்படாததால் பொதுமக்கள் மின்சார கம்பிகளில் துணிகளை உலர்த்துகின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களின் சில பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையே நீடித்து வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல், காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிகளில் அப்பகுதிகளில் மின்கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர்கள் உடைந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை, வெள்ளம் ஏற்பட்டு ஓய்ந்து 8 நாட்கள் ஆகியும் இன்னும் அப்பகுதிகளில் மின்சாரம் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து, மின் வினியோகம் முழுமையாக சீராகாத நிலையில், இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மின்சார கம்பிகளில் பொதுமக்கள் துணிகளை உலர்த்து வருகின்றனர். மேலும், மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.