சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலி!
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சியாச்சினில் இன்று பெரிய பனிச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்பனிச்சரிவு அங்குள்ள இந்திய ராணுவ தளத்தைத் தாக்கியுள்ளது. இதனால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் பனியில் புதையுண்டனர். இதனை தொடர்ந்து இந்திய ராணுவம் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியது.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேர மீட்பு குழுவின் முயற்சியால் பனியில் சிக்கிய ஒரு கேப்டன் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மீட்புக் குழுக்கள் இதுவரை மூன்று வீரர்களின் உடல்களை மீட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சியாச்சின் பகுதியில் பனிச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்படதக்கது.