புதிதாக மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும, நீதிபதிகள் தேர்வுக் குழுவில் (கொலீஜியம்) உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய்யைத் தவிர, நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். நீதிபதிகள் தேர்வுக் குழு கூட்டம் கடந்த மே 26ஆம் தேதி நடைபெற்றது. இதில் மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்துவதற்கான பரிந்துறைகள் முன்வைக்கப்பட்டது.
அதன்படி கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் அம்மூவரும் புதிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை(மே.29) காலை அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூவரின் நியமனங்களுடன் உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளை எட்டும்.