மும்மொழிக் கொள்கை விவகாரம் : “தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்” - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!
தமிழ்நாடு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்தியை திணிக்கும் மாற்று வழியே மும்மொழிக் கொள்கை என திமுக அரசு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டு மக்களும் பலர் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் இந்த நிலைப்பாடு தற்போது இந்தியாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மும்மொழி விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி : -
“தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி மும்மொழிக் கொள்கை குறித்து தவறான தகவல் மூலம் மக்களை ஒன்றிணைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார். மோடி அரசு எந்த புதிய கொள்கையையும் கொண்டு வரவில்லை. மும்மொழி முறை நீண்ட காலமாக உள்ளது.
கடந்த 1986 ஆம்ஆண்டு தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 2020ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த 5 ஆண்டுகளில் இந்தப் பிரச்சினையை அவர்கள் ஏன் எழுப்பவில்லை?. இப்போது தேர்தல்கள் நெருங்கி வருவதால், அதை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது. அதனால் தான் திமுக அரசு மாநிலத்தில் ஒரு சூழலை உருவாக்கவும், தேர்தலுக்கு முன்னதாக இந்த விவகாரத்தை தவறாக சித்தரிப்பதிலும் ஈடுபட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.