மூன்று நாள் போர் நிறுத்தம் - ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!
உக்ரைன் - ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப், “இரு நாடுகளும் தாக்குவதை நிறுத்தி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக ஈஸ்டர் தினத்தன்று போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். அப்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீறி பல்வேறு செயல்களில் ஈடுபட்டதாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் தங்களுக்குள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின, மீண்டும் 3 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு விழா கொண்டாட்டம் மாஸ்கோவில் நடைபெறுவதையொட்டி மே 8 ஆம் தேதி முதல் 11 ஆம் வரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மே 8 - 11 வரை 72 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் உக்ரைனும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் மீறினால் ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த போர் நிறுத்தத்தில் உக்ரைனும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.