தந்தத்திற்காக யானையை வேட்டையாடி எரித்த மூவர் கைது!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏமனூர் வனப் பகுதியில், கடந்த மார்ச்
1-ம் தேதி ஆண் யானை வேட்டையாடப்பட்டு எரித்து, தந்தங்கள் கடத்தப்பட்டது. தொடர்ந்து வனத் துறையினர் நடத்திய விசாரணையில் யானையை துப்பாக்கியால் சுட்டு தந்தங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக ஏமனூர் அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜூ ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் யானையின் 2 தந்தங்கள் சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள காரைக்காடு கிராமத்தில் பறிமுதல் செய்தனர்.
யானையை வேட்டையாட பயன்படுத்திய இரண்டு நாட்டு துப்பாக்கிகள், கத்திகள்,
வெடிமருந்துகள், கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம்,
இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். நேற்று வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற செந்தில் என்பவர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இதனால் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.