மிரட்டிய மிக்ஜாம் புயல் | தத்தளிக்கும் வட சென்னை!
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, புழல் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் வட சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மணலி புதுநகர், மாதவரம்,ஆண்டார்குப்பம்,சடையங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளது. வடசென்னைக்கு உட்பட்ட மணலி பகுதியில் 3 திசைகளும் மழை நீரால் சூழப்பட்டதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாமல் இருந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி செய்யும் சி.பி.சி.எல், உரத் தொழிற்சாலையான எம்.எஃப்.எல் உள்ளிட்ட நிறுவனங்களை மழை நீர் சூழ்ந்ததால் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக நூறு ரூபாய் கொடுத்து வீட்டை விட்டு வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் மணலி, திருவெற்றியூர், சத்தியமூர்த்தி நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர் ,இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீட்டை விட்டு திருமண மண்டபங்கள் மற்றும் உறவினர்களில் இல்லங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மழைநீருடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கலந்ததால் அப்பகுதியே தூர்நாற்றத்துடன் காணப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பெருமழையின் போதெல்லாம் புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரானது அப்பகுதியை சுற்றி தேங்கி நிற்பதால், தங்கள் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற வெள்ளப்பெருக்குகளை தடுக்க எதிர்காலத்தில் உடனடியாக உபரிநீர் கால்வாய்களை தூர்வாரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.