அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு... பறவைக் காய்ச்சல் காரணமா?
உலகின் தெற்கு கண்டமான அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறந்ததன் பின்னணியில் புவிவெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என ஆராயப்படுகின்றன.
மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அண்டார்டிகா கண்டம். பூமியில் அதிகரித்து வரும் வெப்பமயமாதல் எதிரொலியாக இயற்கை அதன் சமநிலையை இழந்துவருகிறது. இந்த அடையாளங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான பென்குயின் பறவைகள் அண்டார்டிகாவில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனுடன் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் அண்டார்டிகா கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், 532 அடேலி பென்குயின்கள் இறந்துவிட்டதாக ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை, அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின் இறந்திருப்பதாக தெரிவித்தது.
முதல்கட்ட ஆய்வில் பென்குயின் பெரும் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அண்டார்டிகாவில் அதிகரித்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பென்குயின் மரணங்களை அடுத்து அதன் பின்னணி குறித்து அறிய, அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2,80,000 அடேலி பென்குயின்கள் ஹெரோயினா தீவில் இனப்பெருக்கம் செய்கின்றன. அப்படி வருகை தரும் பென்குயின்கள் மத்தியில் பரவும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் அவற்றின் பல்லாயிரம் உயிர் பலிகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அண்டார்டிக் தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள மூன்று தீவுகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்குயின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உண்ணும் ஸ்குவா கடற்பறவைகளில் இந்த பறவைக் காய்ச்சலின் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆராய்ச்சியாளர்களின் கணக்கெடுப்பின்படி, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் ஜோடி பென்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன. தற்போது பரவும் பறவைக்காய்ச்சல் பென்குயின் இனத்துக்கு அச்சுறுத்தலாக எழுந்திருப்பது சூழியல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை உயிரினத்தின் மீதான பாதிப்பு என்பது தொலைநோக்குப் பார்வையில் புவி உயிர்கோளத்துக்கு விடுக்கபடும் எச்சரிக்கை என்பதால், பென்குயின்கள் உயிரிழப்பு புதிய கவலையாக பார்க்கப்படுகிறது.