“பணக்கொழுப்பு உள்ளவர்களுக்கு தேர்தல் வியூக அமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள்” - விஜய்யை மறைமுகமாக சாடிய சீமான்!
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை தீர்மானித்தவர்கள் வாக்காளர்கள் அல்ல, வாக்கும் எண்ணும் நபர்கள் தான். நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்க கூடாது என்ற எண்ணத்தோடு, அதிகார பலத்தோடு,
ஆளும் கட்சி தூண்டுதலோடு பல்வேறு சதி திட்டங்கள் நடைபெற்றன.
40,000 வாக்குகளுக்கு மேல் பெற வேண்டிய நாம் தமிழர் கட்சி, அதிகார பலத்தின்
அதிகாரத்தால் டெபாசிட் இழக்க உத்தரவிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.
எந்த தேர்தலை எடுத்துக் கொண்டாலும் தொண்டர்களை நம்பியே நாதக உள்ளது.
மக்களுடனும், நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடனும் கூட்டணியில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றோம். தற்போது உள்ள நிலையில், அரசை எதிர்த்து பிரச்சனையோடு, எதிர்பார்ப்போடு, கண்ணீரோடு, போராடும் அனைத்து தரப்பு மக்களுடன்தான் நாம் தமிழர் கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளது.
தற்போது தமிழகத்தில் இந்த சீமான் மட்டும் தான் தமிழ் தாயின் மகனாக உள்ளேன். மற்றவர்கள் எல்லாம் சாதி சார்ந்து, மதம் சார்ந்து தமிழர்களாக உள்ளார்கள். விஜய் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைக்க பொறுப்பு நியமிக்கப்பட்டிருப்பதை செய்தி மூலம் அறிந்தேன். வியூகம் அமைப்பதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்த நாட்டை சிறப்புற ஆட்சி செய்த எங்கள் முன்னோர்கள் எல்லாம் வியூகம் அமைக்க குழு அமைத்ததில்லை. பெருந்தலைவர் காமராஜரோ, பெருந்தகை அண்ணாவோ, அதுக்கு முன் இருந்த குமாரசாமி, ராமசாமி ரெட்டி ஆகியோரெல்லாம் தேர்தல் வியூகம் அமைப்பவர்களை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தவர்கள் இல்லை.
என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை என வைத்துக்கொண்டு எது எது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத நான் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும். ஜெயங்கொண்டத்தில் யாரை நிறுத்தினால் வெல்லலாம், அரியலூரில் யாரை, திருவண்ணாமலை, செய்யாரில் யாரை நிறுத்தினால் வெல்லலாம் என்று கூட தெரியாத நான் எதற்கு அரசியலில் ஈடுபட வேண்டும்.
எனக்கு நிறைய மூளை உள்ளது. ஆனால் காசு தான் இல்லை. அதனால எனக்கு அது தேவையில்லை. எத்தனை வியூகம் அமைப்பாளர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது. கத்திரிக்காய் விதை வயலில் விதைத்து, செடி நட்டு, உரம் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து எடுத்தால்தான் கத்திரிக்காய் கிடைக்கும். பேப்பரில் கத்திரிக்காய் என்று எழுதி வைத்தால் கத்திரிக்காய் வராது, கிடைக்காது.
குறிப்பிட்ட காலமாக தேர்தல் வியூகம் அமைப்பு என்ற நோய் வந்துவிட்டது.
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும். எத்தனை ஆறு எத்தனை குளம், எத்தனை ஏரி, எத்தனை ஊரு எத்தனை மலை என என்ன தெரியும். உடலில் கொழுப்பு உள்ளது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். வாய்க்கொழுப்பு
அதிகம் உள்ளவர்கள்.
பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் அமைப்பாளர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள். தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க உத்தரவிட்டவர், அப்போதைய அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க சொன்னவன் இந்த சீமான். அதை
நிறைவேற்றியவர் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத முதலமைச்சருக்கு தைப்பூசம் பற்றி என்ன
தெரியும்” என கேள்வி எழுப்பினார்.