“அரசியலில் புறம் தள்ளப்பட்டவர்கள்” - சேகர் பாபு பதிலடி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியாரைப் பற்றி விமர்சித்து பேசியது சர்ச்சையானது. இதையடுத்து அவரின் பேச்சுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் சீமான் விமர்சித்து பேசியதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆதரவாகப் பேசியிருந்தார். இந்த நிலையில் சீமான் மற்றும் ஜான்பாண்டியன் ஆகியோருக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இவர்கள் அரசியலில் புறம் தள்ளப்பட்டவர்கள். வாழும் மனிதராக சமுதாயத்தின் பகுத்தறிவு விடிவெள்ளியாக நூற்றாண்டுக்கு மேல் தமிழ்நாடு மண்ணில் வேரூன்றிய பெரியாரை அளிக்க இனி ஒருவர் பிறந்து உருவெடுத்து வந்தால்தான் முடியும். இது திராவிட மண்.
சித்தாந்தங்கள் பல இருந்தாலும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தங்களை அடையாளப்படுத்துவதற்காக 'நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக' கருத்துகளைக் கூறி வருவது அவர்களுடைய பணி. சூரிய உதயத்திற்கு முன்பு மக்களை சந்தித்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வேலைகளை மேற்கொள்வதுதான் எங்களுடைய பணி” என்று தெரிவித்தார்.