"மக்களுக்கு நல்லது செய்பவர்கள் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு உண்டு" - நடிகர் பிரசாந்த் பேட்டி!!
மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு எனது ஆதரவு உண்டு என நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பிரசாந்த் பதிலளித்துள்ளார்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'அந்தகன்' திரைப்படத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைக்கவசம் வழங்கும் விழா அவனியாபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த் 50 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
இதையும் படியுங்கள் : பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் – அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!
நடிகர் பிரசாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :
"தற்போதைய காலகட்டத்தில் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. உயிரிழப்பை தவிர்ப்பதற்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று கூறுவதை விட, அது அனைவரின் குடும்பத்திற்கே கவசம். வண்டியை நிதானமாக ஓட்டுங்கள், கட்டாயமாக தலைக்கவசம் அணியுங்கள். இந்த செய்தியை என் ரசிகர்கள் மூலம் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் தேர்வு செய்த திரைப்படங்கள் எடுத்து முடிப்பதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொண்டது. பொன்னர் சங்கர் சூட்டிங் மட்டும் நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. அது ஒரு வரலாற்று திரைப்படம் அதுபோல வரலாற்று திரைப்படம் எடுக்க நிறைய பேர் முயற்சித்தார்கள். ஆனால், முடிக்க முடியவில்லை. 'பொன்னர் சங்கர்' திரைப்படம் தான் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது.
அந்தகன் படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. என் தந்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இதுவரை பார்த்த பிரசாந்தை விட இந்தப் படத்தில் வித்தியாசமான ஒரு பிரசாந்தை பார்க்கலாம்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க வேண்டியது தான் நடிகன். எனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் வயதிற்கு ஏற்ற தோற்றத்தில் ஏற்ற கதையை தான் தேர்ந்தெடுக்கிறேன். நான் யாரிடமும் சென்று படம் நடிக்க வேண்டும் என்று கேட்டதில்லை. பல கதைகள் கேட்கிறேன் அதில் அது போன்ற கதாபாத்திரங்கள் அமைந்தால் செய்வேன்.
இன்றைய காலகட்டத்தில் மொழி என்பது பிரச்னையே கிடையாது. ஒரு மொழியில் எடுத்தால் அது எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளியிடலாம். முதல் பான் இந்தியா திரைப்படம் ஜீன்ஸ் தான். எதுவாக இருந்தாலும் முதலில் செய்வதற்கு கடவுள் எனக்கு ஒரு வரம் கொடுத்துள்ளார்.
ஒரு தொழிலதிபர், ஒரு டாக்டர் அரசியலுக்கு வந்தால் எப்படி பார்ப்பீர்களோ அதே கண்ணோட்டத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும் பார்க்கலாம் தவறில்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு எனது ஆதரவு உண்டு. 'GOAT' திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. கல்லூரியில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பது போல் தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வரும்"
இவ்வாறு நடிகர் பிரசாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.