"தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்!
பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அலுவலகம் திறப்பதற்காக தேமுதிகவின் மாவட்ட கழக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் சென்று திறந்த போது மாற்றுக் கட்சியினர் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து அங்கிருந்த தேமுதிக நிர்வாகிகளை கத்தி, அரிவாள், இரும்பு கம்பி போன்றவை மூலம் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த கலவரம் காவல் நிலையத்திற்கு எதிரே நடந்துள்ளது. காவல் துறையினர் அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர், நமது நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரை அழைத்த பின்பு கலவரத்தைத் தடுத்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்க கூடிய ஒரு செயல். தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக யாராக இருந்தாலும் காவல் துறை கைது செய்யவேண்டும். இல்லையெனில் தேமுதிக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.