“இந்தாண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்” - கமல்ஹாசன் பேச்சு!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது , “இன்று உலக தாய் மொழி தினம் . நம் மொழியின் குரல் வளையை பிடிப்பவர்களுக்கு தெரிய வேண்டும், இது எப்படிப்பட்ட தினம் என்று. நான் எப்படி தோற்றுப்போனேன் என்பதை சொல்லுகிறேன். நான் 20 வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வரத் தவறியதுதான் எனக்கு தோல்வியாகபடுகிறது. அப்படி வந்திருந்தால், இன்று நான் வந்து நின்று பேசும் இடம் வேறாக இருந்திருக்கும்.
எனக்கு வாக்களிக்காதவர்களும் என் உறவுகள்தான். எனக்கு காந்தியை பிடிக்கும் அளவுக்கு பெரியாரையும் பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன் தான். எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு. கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும். மொழிக்காக தமிழ்நாட்டில் உயிரை விட்டுள்ளார்கள். எந்த மொழி வேண்டும் என்ற அறிவு தமிழர்களுக்கு உண்டு. குழந்தைக்குக் கூடத் தெரியும், அதிகமாக உணவு ஊட்டி விட்டாள் முகத்தில் துப்பிவிடும். அதை செய்ய தூண்டாதீர்கள்.
இப்போது எட்டாம் ஆண்டில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த வருடம் நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அதற்கான விழாதான் இது. நான் முதலமைச்சராவதற்கு வரவில்லை. முதலில் இருந்து மாற்றி அமைப்பதற்காக வந்துள்ளேன். எனக்கு முன்னுதாரணமாக காந்தி, பெரியார் இருக்கிறார்கள். அம்பேத்கர் தோற்றதற்காக இந்தியாவை விட்டு போய்விட்டாரா? இன்னும் அவர் எழுதிய புத்தகங்களில் அழுத்தமான முன்னோடி கருத்துகள் உள்ளது.
நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என யாரும் சொல்லக்கூடாது. நான் மொழிப்போராட்டத்தில் அரைநிஜார் போட்டு பங்கேற்றேன். இனிமேல் வலியுறுத்த மாட்டோம் என மேல் தலைமை சொன்ன பிறகு அமைதியடைந்தோம். அதன்பிறகு நான் இந்தி படத்தில் நடித்தேன். ஒரு வார்த்தை இந்தி தெரியாது எனக்கு. ஆனாலும் நடித்தேன். அதேபோல் என்ன படிக்க வேண்டும் என தேர்வு செய்வதை தமிழர்களிடம் விட்டுவிட வேண்டும். அதில் அரசியல் செய்யக்கூடாது. மொழி, கல்வி, ஞானம் அனைவருக்கும் சொந்தமானது”
இவ்வாறு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.