இந்த வாரம் வெளியான படங்கள் - இதோ மினி ரிவியூ!
இந்த வாரம் (ஆகஸ்ட் 9, 2025) ராகுகேது, வானரன், நாளை நமதே, ரெட்பிளவர், மாமரம், காத்து வாக்குல ஒரு காதல் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் கதை என்ன? எதை பார்க்கலாம், எதை ரசிக்கலாம். இதோ மினி ரிவியூ
வானரன்
மறைந்த நடிகர் நாகேஷ் பேரன் பிஜேஷ் கதைநாயகனாக நடிக்க, ஸ்ரீராம் பத்பநாபன் இயக்கி இருக்கும் படம் வானரன். அனுமார் வேடமிட்டு வீடு, கடைகளில் காணிக்கை பெற்று வாழ்க்கையை ஓட்டுகிறார் பிஜேஷ். காதல் மனைவி இறந்த நிலையில், மகளை பாசமாக வளர்க்கிறார். திடீரென மகளுக்கு காய்ச்சல்.
‘‘உங்க மகள் மூளையில் கட்டி இருக்கிறது. உடனே ஆபரேசன் செய்யணும். பல லட்சம் செலவாகும்’’ என்கிறார் டாக்டர். கடவுள் வேடமிட்டு பிச்சை எடுத்து சாப்பிடும் அந்த பாசக்கார அப்பா என்ன செய்கிறார். அந்த பணம் கிடைத்ததா? மகளுக்கு வெற்றிகரமாக ஆபரேசன் நடந்ததா என்பதை மனிதநேயம், நட்பு, பகல்வேசம் என்ற கலை கலந்து அழுத்தமாக திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தாத்தா பெயரை காப்பாற்றும் வகையில் ஓரளவு சிறப்பாக நடித்து இருக்கிறார் பிஜேஷ். பகல்வேஷம் என்ற நாடக கலை பற்றி அவர் விவரிப்பது, அவரின் காதல், மகள் மீதான பாசம், ஆபரசேனுக்கு பணம் கிடைக்காமல் கலங்குவது, கிடைத்த பணத்தை தொலைத்துவிட்டு தவிப்பது , கடைசியில் எதிரியையும் மன்னிப்பது என படம் முழுக்க ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரின் இயல்பான நடிப்பும், அந்த அப்பாவிதமான செய்கைகளும் , அந்த பாத்திர படைப்பும் படத்துக்கு பலம். அவரை தவிர, விஜயகாந்த் வேடமிடுபவராக வரும் நாமக்கல் விஜயகாந்த்தும் , திருடனாக வரும் ஆதேஷ்பாலா, பண உதவி செய்யும் இஸ்லாமியராக வரும் ஜீவா, டி.ஆர்.வேடமிடுபவர், அந்த டாக்டர் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அதில் நாமக்கல் விஜகாந்த் நடிப்பு டச்சிங். குறிப்பாக, ஹீரோ மகளாக வரும் வர்ஷா தனது கியூட்டான நடிப்பால் கைதட்டல்களை அள்ளுகிறார். கவுரவ வேடத்தில் வரும் நாஞ்சில் விஜயன், தீபாசங்கர் காட்சிகள் கலகலப்பு
அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமானது. நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அப்படிப்பட்ட பாசம் இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்ற கரு மாறுபட்டது. கொஞ்சம் மெதுவாக கதை நகர்கிறது. கொஞ்சம் நாடகபாணி இருக்கிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் நிறைவான படம். மனித நேயத்தை சொல்லும் கதை.
வீதிகளில் கடவுள் வேடமிட்டு செல்பவர்கள் மீதான பார்வையை மாற்றுகிறது கதை. அப்படி செல்பவர்களுக்கும் குடும்பம், குழந்தை இருக்கிறது. அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும், கிண்டல் கேலி செய்யக்கூடாது என்ற நல்ல கருவை சொல்லி பீல் பண்ண வைக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன்
**
ராகு கேது
நவக்கிரகங்களில் ராகு கேது எப்படி சேர்ந்தது. சுவர்பானு என்ற அசுரன் ராகு கேதுவாக எப்படி மாறினான். ராகு கேதுவின் குணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான பரிகாரங்கள் என்பது போன்ற விஷயங்களை விரிவாக சொல்கிறது பாலசுந்தரம் இயக்கிய இந்த படம். சுவர்பானு என்ற அரக்கனாக இயக்குனரே நடித்து இருக்கிறார். படத்தின் கதாசிரியர், வசனகர்த்த கே.பி.அறிவானந்தம் ஜோசியராக வந்து ராகுகேது பற்றி இன்னும் அதிகமாக விளக்குகிறார்.
அசுரர்கள், தேவர்கள் பிரச்னை இடையே, பாற்கடலை கடைவது, அதில் வரும் அமிர்தத்தை திருட்டுதனமாக சுவர்பானு பருகுவது, அதனால் கோபம் கொண்ட திருமால் மோகிணி அவதாரம் எடுத்து அவன் தலையை வெட்டுவது, பின்னர் துர்க்கை அருளால் அவன் ராகு, கேதுவாக மாறுவது போன்ற விஷயங்கள் எளிமையாக சொல்லப்பட்டு இருக்கின்றன. கடைசியில் நவகிரகங்களின் பாதிப்பு, பரிகாரம், அதற்கான மந்திரங்கள், காளகஸ்தி ஸ்தல மகிமைகள் ஆகியவை விவரிக்கப்படுகி்ன்றன. தமிழில் பல ஆண்டுகளுக்குபின் முழு நீள பக்தி படமாக வந்து இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் நடந்து இருக்கிறதா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன சீன்கள், துர்க்கையாக நடித்த கஸ்துாரியும், சிவனாக வரும் சமுத்திரக்கனியும் மனதில் நிற்கிறார்கள்
சுவர்பானுவாக நடித்த இயக்குனரின் நடிப்பு, வசன உச்சரிப்பு, காட்சிகளை எளிமையாக, விளக்கமாக சொல்லும் முறை அருமை. சில இடங்களில் நாடகத்தன்மை தோன்றினாலும், புராண படங்களில் வரும் உடை, அணிகலன் விஷயங்கள் கச்சிதம். ராகு கேது கதையை ஒரு அரசன் கதை வழியாக புதுமையாக சொல்லியிருக்கிறார்கள். ஆன்மிக பிரியர்களுக்கு, நவகிரக வழிபாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த படம் பிடிக்கும். மற்றவர்களுக்கு அட ராகு கேதுவுக்குபின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா, நாம் இப்படி பரிகாரம் செய்ய வேண்டுமா என்ற வியப்பு ஏற்படும்.
**
நாளை நமதே
வெண்பா கதிரேசன் இயக்கத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், முருகேசன் உள்ளிட்ட பலர் நடித்த அரசியல் படம். ஆனால், இந்த படம் தனித்தொகுதிகளுக்கான அரசியலை பற்றி பேசுகிறது. சிவகங்கை மாவட்டம் சிவதானுபுரம் பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அங்கே தலைவராக இருந்தவரும், தலைவர் பதவிக்கு போட்டியிட நினைக்கும் இன்னொருவருக்கும் இந்த அறிவிப்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனாலும், அரசு உத்தரவாச்சே. வேறு வழியின்றி தங்கள் பண்ணையி்ல் வேலை செய்யும் பெருமாளை டம்மி வேட்பாளராக நிறுத்துவிட்டு, தாங்கள் மறைமுகமாக அதிகாரம் செலுத்த நினைக்கிறார்கள். பெருமாள் மருமகளான ஹீரோயின் மதுமிதாவும் அந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவரை போட்டியில் இருந்து விலக வைக்க நினைக்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பு மதுமிதாவுக்கு சப்போர்ட் செய்ய, அந்த தேர்தலில் யார் ஜெயித்தார்கள் என்பது கதை.
கதைநாயகியாக வரும் மதுமிதா நடிப்பு, வசனங்கள், அவரின் செயல்பாடுகள்தான் படத்தின் பெரிய பிளஸ். அநீதிக்கு எதிராக அவர் போராடுவது, அவமானங்களை சந்திப்பது ஆகிய சீன்கள் மனதில் நிற்கிறது. ஒரு தைரியமான பெண் கேரக்டரில் பின்னணியில் கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலிதனம்
. அவர் மாமனராக, எதிர் வேட்பாளராக வரும் முருகேசனும் நன்றாக நடித்து இருக்கிறார். வில்லன்கள் தங்கள் உரிய பாணியில் ஜாதி பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். மதுமிதாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள். கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். ஆனாலும், இன்னும் இப்படிப்பட்ட சூழ்நிலை பல இடங்களி்ல் இருக்கிறது. பல கிராமங்களின் அரசியல் இப்படி இருக்கிறது என்று மெசேனை அழுத்தமாக சொல்கிறார்கள். கமர்ஷியல் படமாக இல்லாவிட்டாலும் தனித்தொகுதி தேர்தல்களின் பின்னால் நடக்கும் அரசியல்கள், அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகள், பாதிக்கப்படும் மக்களின் மனநிலை, அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், மிரட்டல்கள், போலீஸ், அரசு அதிகாரிகள் தரப்பு நிலை ஆகியவற்றை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது நாளை நமதே
**
மாமரம்
ஜெய்ஆகாஷ் இயக்கி நடித்திருக்கும் படம், இது காதல் படம். இதற்கும் மாமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது கதை. கல்லுாரி மாணவரான ஜெய்ஆகாஷ், ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி மீது ஜெய்ஆகாசுக்கு சந்தேகம் வருகிறது. அவரை பிரிகிறார். காதல் அவருக்கு கசக்கிறது. கொஞ்ச காலம் கழித்து அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் இன்னொரு ஹீரோயின். அந்த காதல் கனிந்ததா? ஜெய்ஆகாசின் முன்னாள் காதலிக்கு என்ன ஆனது. இந்த இரண்டு காதல் வாழ்க்கையில் மாமரம் எப்படி வந்தது என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார். கல்லுாரி காதல் காட்சிகள் ஓகே. மீனாட்சி, சந்தியா ஆகிய இரண்டு ஹீரோயின்களும் அழகாக, கவர்ச்சியாக இருக்கிறார்கள். பாடல்காட்சிகளில் ஜொலிக்கிறார்கள். காதல், கோபம், ஆக் ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் ஜெய்ஆகாஷ் நடிப்பு ஓகே. என்ன, பல கெட்அப்புகளில் அவர் வருவது, ஒரே நேரத்தில் சில படங்கள் பார்த்த பீலிங், கேமரா, எடிட்டிங்கில் நேர்த்தி குறைவு. பாடல்கள், காமெடியில் பழைய ரகம்.
தனக்காக இதயத்தை கொடுத்துவிட்டு உயிரை விடும் முன்னாள் காதலிக்காக, அவர் ஆசையாக நட்ட மாமரத்தை காதல் சின்னமாக வளர்க்கிறார் ஜெய்ஆகாஷ். அந்த மாமரத்துக்கு வில்லன்களி்ல ஆபத்து வர ஆக்ரோசமாகிறார், அந்த மாமரத்தை காப்பாற்றினாரா என்பது கிளைமாக்ஸ். கொஞ்சம் பழைய படம் மாதிரி தெரிவதும், சில காட்சிகள் ரிபீட் ஆவதும் படத்தின் மைனஸ்
**
காத்துவாக்குல ஒரு காதல்
வட சென்னையில் தாதாவாக இருக்கும் மாஸ் ரவி காதலை வெறுக்கிறார்.அவரை துரத்திதுரத்தி காதலிக்கிறார் பல்லவி. இன்னொரு பக்கம் தனது காதலன்தான் மாஸ்ரவி , அப்பாவியான அவர் எப்படி தாதாவானார் என்று சந்தேகப்படுகிறார் இன்னொரு ஹீரோயினான லட்சுமிபிரியா. மாஸ்ரவி யார்? அவருக்கு இரட்டை வேடமா? அவர் எப்படி இரண்டு பெண்களை காதலிக்கிறார்கள்? உண்மையில் நடந்தது என்ன என்பதற்காக தீர்வு சொல்லும் படம் காத்து வாக்குல ஒரு காதல். வில்லன்கள் அணிகளுக்கு இடையேயான மோதல், அப்பாவியான மாஸ்ரவியின் காதல், சாய்தீனா பெரிய ரவுடியாக மாறுவது ஆகியவை முதற்பாதியாக ஓடுகிறது. சாய்தீனா, மாஸ்ரவி மோதல், காதலிகளின் நிலை, கடைசியில் ஒரு டுவிஸ்ட், மாஸ் ரவி யார் என்று விடையுடன் படம் முடிகிறது. அந்த கடைசி சில நிமிடங்கள்தான் படத்தின் உயிர். இயக்குனர், ஹீரோ இரண்டுபேரும் மாஸ்ரவிதான். தனக்காக சீன்களை நன்றாக அமைத்துள்ளார். மற்றபடி வழக்கமான வில்லன், வழக்கமான வடசென்னை, வழக்கமான காதல் என்று படம் சுமாராக செல்கிறது.
**
ரெட்பிளவர்
இந்த படத்தின் கதை 2047ல் நடக்கிறது. அப்போது இந்தியாவின் பிரதமராக ஓய்.ஜி.மகேந்திரன் இருக்கிறார். ஜனாதிபதியாக ஒரு இளம் பெண் இருக்கிறார். உலகை அச்சுறுத்தும் வில்லனான தலைவாசல் விஜய், இந்தியா தங்களுக்கு அதிக வரி கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். இந்திய பெண்களை கொல்கிறார், இந்தியா மீது பெரிய தாக்குதல் நடத்த தயாராகிறார். அப்போது இந்தியாவின் ரெட்பிளவர் அமைப்பை சேர்ந்த உளவுத்துறை வீரரான விக்னேஷ் இந்த தாக்குதலை எப்படி தடுத்து நிறுத்துகிறார். கெட்டவனாக மாறிப்போன தனது தம்பியிடம் இருந்து காதலியை மீட்டாரா என்பது கிளைமாக்ஸ். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி உள்ளார். அண்ணன், தம்பி சண்டை, சாடிலைட் மூலம் நடக்கும் உளவு பிரச்னைகள், இந்தியாவை அழிக்க நினைக்கும் அமைப்பு மற்றும் வில்லன்களில் சண்டை என கதை செல்கிறது. அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் வருகிறார் விக்னேஷ். இதில் தம்பி நடிப்பு பரவாயில்லை ரகம். அதிக வன்முறை, பெண்கள் மீதான தாக்குதல் படத்தின் மைனஸ்
கிராபிக்ஸ், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் பேசப்பட்டு இருக்கும். ரெட்பிளவர் என்பது நேதாஜியால் உருவாக்கப்பட்ட அமைப்பு, அது 2047லும் இந்தியாவை காக்கும் என்ற கரு மட்டும் ஓகே, மற்றபடி, படம் போராடிக்கிறது
இந்த படங்கள் தவிர , இந்த வாரம் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. உழவர் மகன், மகேஸ்வரன் மகிமை, நிஷா ஆகிய சின்ன படங்களும் சில தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் ஆகியுள்ளன.
மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்