பெண்கள் டி20 WorldCupல் இந்த அணியால் இந்தியாவுக்கு ஆபத்து! - எச்சரித்த ஹர்பஜன் சிங்!
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இன்று முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில், போட்டியை நடத்தும் வங்கதேசம் - ஸ்காட்லாந்து, பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஷாா்ஜாவில் மோதுகின்றன. இந்தியா முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வெள்ளிக்கிழமை (அக். 4) துபையில் சந்திக்கிறது. போட்டியின் வரலாற்றில், நடப்பு சாம்பியான ஆஸ்திரேலிய அணி 6 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் 2 முறை ஹாட்ரிக் கோப்பையை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் குரூப் ‘ஏ’-விலும், வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை குரூப் ‘பி’-யிலும் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இந்திய மகளிரணி ஆஸி.யுடன் விளையாடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நமது குரூப்பில் ஆஸி., நியூசி.,பாக்., இலங்கை அணிகள் இருக்கின்றன. அனைத்து போட்டிகளும் முக்கியமானதாக இருக்கும். ஆனால், ஆஸி. உடனான போட்டி சற்று கூடுதல் கடினமானது. துபையில் நடந்தாலும் ஆஸி. அணியை சாதாரணமாக நினைக்கக் கூடாது. எங்கு விளையாடினாலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினம்.
இந்தியாவின் மிகப்பெரிய சவால் ஆஸி.யை வீழ்த்துவதுதான். இலங்கையுடன் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளும் இளம் வீராங்கனைகளும் இருக்கிறார்கள். ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். தீப்தி நல்ல சுழல் பந்துவீச்சாளர். அணியாக நன்றாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக நல்ல கிரிக்கெட் விளையாடினால் கோப்பையை வெல்லலாம்.
இந்தப் போட்டிகளில் இந்திய அணியினர் அழுத்தத்துக்கு உள்ளாகாமல், தங்களது அனைத்து திறனையும் வெளிப்பட்டுத்த வேண்டும். தற்போதைக்கு சிறுநீரகமும் கல்லீரலும்தான் முக்கியம். உங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அணியாக விளையாட வேண்டும். உங்களது சிறந்த செயல்பாடுகளை அளித்தால் வெற்றி தானாக வந்துசேரும். கோப்பையை பற்றி நினைக்காதீர்கள்; சிறிய அடியை எடுத்து வைப்பது போல் ஒவ்வொரு போட்டியில் கவனம் செலுத்துங்கள். செய்முறையில் கவனமாகயிருங்கள். இதையெல்லாம் நமது இந்திய அணி செய்தாலே நன்றாக செயல்பட முடியும் என்றார்.