"இந்த வீரருக்கு பந்து வீசவே பயமாக இருக்கிறது" - அபிஷேக் சர்மாவை புகழ்ந்த பாட் கம்மின்ஸ்...!
ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீசுவதற்கு பயமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 22ம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மே 22-ம் தேதி முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீசுவதற்கு பயமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
போட்டி நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக பேசிய பாட் கம்மின்ஸ் கூறியதாவது, "அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு பந்துவீச நான் விரும்ப மாட்டேன். அவர் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சுதந்திரமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பார்ப்பதற்கு பயமாக உள்ளது" என்றார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.