சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் - பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!
குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல மற்றும் மகர பூஜை நடக்கும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்தாண்டு மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 2 வாரங்களில் பக்தர்கள் கட்டுக்கடங்காத பெருங்கூட்டத்துக்குள் தள்ளப்பட்டு சிக்கித்திணறி 24 மணி நேரம் வரையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பெரும்பாலும் குழந்தைகள் பெறும் அவதியுற்றனர்.
இதையும் படியுங்கள் : தொடர் கனமழை எதிரொலி – திருநெல்வேலியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல், பாதுகப்பாக செல்வதற்காக தேவஸ்வம் போர்டு அமைத்த சிறப்பு வரிசை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சபரிமலையில் உள்ள நடை பந்தலில் ஒன்பதாம் வரிசை வழியாக வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அங்கிருந்து போலீஸ் உதவியுடன் பதினெட்டாம் படி ஏறி, மேம்பாலத்தைத் தவிர்த்து, சன்னதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக நேராக சென்று சாமியை காணலாம்.
முதல் வரிசையில் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் உடன் வரும் பெற்றோர் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவசம் ஊழியர்கள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியதாவது:
"இன்று காலை முதல் பக்தர்களுக்கு இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் புதிய வசதியை பயன்படுத்த வேண்டும்.
பம்பையில் இருந்து மலை ஏறிய பின் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை தேவசம் போர்டு கண்டிப்பாக அமல்படுத்தும்.
இவ்வாறு தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.