"பல பகுதிகளுக்கு செல்லவே முடியவில்லை ; நேரம் செல்ல செல்ல தான் கோர முகம் தெரியும்" - வயநாடு மீட்புக்குழு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!
“முண்டக்கை, அட்ட மலை பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடிய வில்லை. நேரம் செல்ல செல்ல தான் இதன் கோர முகம் தெரியும்” என மீட்பு பணிக் குழுவில் ஈடுபட்டுள்ள அஜய் நியூஸ்7 தமிழிடம் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சூரல்மலா பகுதியில் காலை 4 மணிக்கு இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால் பள்ளிகள், வீடுகள், வாகனங்கள் என அப்பகுதிகளில் இருந்த அனைத்தும் சேதமடைந்துள்ளன.
மேலும் இந்த நிலச்சரிவில் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர்.
மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவே கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இயற்கை விபத்து குறித்த மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை மீட்பு பணியில் உள்ள அதிகாரி அஜய் நியூஸ்7 தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
“வயநாட்டில் ஏற்கனவே கவளப் பாறை, புத்து மலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவை விட இந்த நிலச்சரிவு அதிக உயிரிழப்பை எற்படுத்தும். மீட்பு பணிகள் தொடர்கிறது. முண்டக்கை, அட்ட மலை பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடிய வில்லை. அங்குள்ள நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை. மழை பெய்கிறது. நேரம் செல்ல செல்ல தான் இதன் கோர முகம் தெரியும்” என தெரிவித்துள்ளார்.