குறுக்க இந்த கௌசிக் வந்தா... தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டை தூக்கி சென்ற கழுகு... அதிர்ச்சியில் உறைந்த மாணவர்!
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாநில பொது சேவை ஆணையம் நடத்தும் துறைரீதியான (பி.எஸ்.சி ) தேர்வு நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்திருந்த நிலையில், அதிகாலையிலேயே வந்த மாணவர் ஒருவர் ஹால் டிக்கெட்டை அருகில் வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கழுகு ஒன்று, திடீரென்று ஹால் டிக்கெட்டை அலகால் கொத்தி எடுத்துச் சென்று ஜன்னல் ஒன்றில் அமர்ந்தது.
ஹால் டிக்கெட் இல்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாத சூழல் உள்ளதால், மாணவர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து நின்றார். கழுகின் மேல் கல் எறிந்து விரட்டினால் ஹால் டிக்கெட்டை எடுத்து பறந்து சென்று விடும் என்று கருதி, ஒன்றும் செய்ய முடியாமல் அனைவரும் திகைத்து நின்றனர்.
அதிர்ஷ்டவசமாக தேர்வு துவங்கும் சிறிது நேரத்திற்கு முன் கழுகு கால் இடறி ஹால் டிக்கெட் கிழே விழுந்ததால், ஹால் டிக்கெட் மாணவர் கையில் கிடைத்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.