குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
இந்த வீடு உங்களுடைய வீடு உங்களுடைய வரி பணத்தில் கட்டிய வீடு இந்த வீட்டிற்கு இனிமேல் நீங்கள் தான் முழு பொறுப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை யானைக்கவுனி கல்யாணபுரம் திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர
வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறு, குறு
மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற
உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
"நாட்டிலேயே முதன்முறையாக 1970 ஆம் ஆண்டு குடிசை மாற்றுவாரியம்
திட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். அந்தத் திட்டத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாடு திட்டம் என அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இன்றைய தமிழக முதலமைச்சர்.
அதன்படி குடிசைகளாக இருந்த பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை கட்டித்
தந்தவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
அந்த குடியிருப்புகளை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என குடியிருப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு 1974 ஆம் ஆண்டு கலைஞரால் கட்டப்பட்டது. புதியதாக 288 அதிகப்படுத்தி கட்டி முடித்துள்ளோம்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இதே போன்று திட்டங்கள் நடைபெற்று
வருகிறது. விரைவில் அந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிந்து பயன் பயன்பாட்டிற்கு வரும்.
இதையும் படியுங்கள் : “சென்னை ஐஐடி-யில் ரூ.30 கோடியில் சர்வதேச விளையாட்டு வளாகம்”- ஐஐடி இயக்குநர் காமகோடி
இந்த வீடு உங்களுடைய வீடு உங்களுடைய வரி பணத்தில் கட்டிய வீடு இந்த வீட்டிற்கு இனிமேல் நீங்கள் தான் முழு பொறுப்பு. உங்களுக்கென நீங்கள் தனி சங்கத்தை தொடங்க வேண்டும். குடியிருப்போர் நல சங்கம் என்று ஒன்றை நீங்கள் தொடங்க வேண்டும்.
சங்கத்தின் மூலம் உங்கள் தேவைகளை பிரச்னைகளை அரசுக்கு தெரியபடுத்தி
தீர்த்துக் கொள்ள வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:
"தொடர்ந்து பல்வேறு திட்டங்களை திராவிட திமுக அரசு செய்து வருகிறது. எந்த பண்டிகை வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் நலத்திட்ட உதவிகளை வழங்குபவர் தயாநிதி மாறன். தயாநிதி மாறனை இந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் விட்டுவிட கூடாது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.