என்னடா இது போலீஸ்க்கே வந்த சோதன! அசந்த நேரத்துல ஆட்டைய போட்டாங்களே...
ஆண்டிபட்டி அருகே வழக்குகளில் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுக்கா, கண்டமனூர் காவல் நிலையத்தில் பல்வேறு
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உள்பட
ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் காணாமல் போயிருந்தன.
காவல் நிலைய வளாகத்திலேயே இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டு
காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கண்டமனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த செல்வக்குமார், முத்துராஜ் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 3 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அசந்த இரவு நேரத்தில் காவல்நிலையத்திற்கு பின்பக்கமாக சுற்று சுவர் மேல் தூக்கி மறுபக்கம் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனம் திருடு
போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.