டெஸ்லா நிறுவனம் இந்தியா மீது ஆர்வம் காட்ட காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்!
“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டுகின்றன” என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒருபடியாகப் பல வருடப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சூழ்நிலை உருவாக்கியுள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில் எலான் மஸ்க் வரும் 22-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவரது இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். எலான் மஸ்க் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளும் டெஸ்லா நிறுவனத்துக்கான ஆலைகளை அமைக்கும் இடங்களை ஆய்வு செய்ய இந்தியா வர உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசினார். அப்போது எலான் மஸ்க்கின் வருகை குறித்து அவர் பேசினார். டெஸ்லா ஆலை மகாராஷ்டிரா அல்லது குஜராத்தில் அமைக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்தியாவுக்காக நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் எனும் நம்பிக்கையில்தான் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.