"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே"... போப்பாக மாறிய டிரம்ப் - வைரலாகும் புகைப்படம்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்.21ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்குப் பிறகு, கடந்த ஏப்26ம் தேதி புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்தது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு வரும் 7ம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்காக வாடிகன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 7ம் தேதி கூடி தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள். இதற்கிடையே, புதிய போப் யாராக இருக்க வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும்" என்று நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும், புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.