“இது உட்கட்சி விவகாரம் எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம்” - அன்புமணி ராமதாஸ் பேட்டி!
பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் பாமகவின் தலைவர் பொறுப்பை நானே எடுத்து கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் தான் பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்று கூறியிருந்தார். இது பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் அன்புமணி ராமதாஸ் நேற்றிரவு(ஏப்ரல்12) தன்னை பா.ம.க. தலைவர் என்று குறிப்பிட்டதோடு தலைமை நிலைய பதிவு என ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், “நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய பாமக நிறுவனர் என்னை ராமதாஸ் மாநாட்டுக்குழு தலைவராக நியமித்திருக்கிறார். அரசியல் களத்தில் அவரின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாட்டு நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். மருத்துவர் ராமதாஸின் கொள்கையை நிலைநாட்ட, அவரது வழிகாட்டுதலில் பாமகவை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக மாற்ற கடுமையாக உழைப்போம்” என்று பேசினார்.