Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” - தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
04:46 PM Mar 14, 2025 IST | Web Editor
featuredImage featuredImage
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14)  தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன். பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.

புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்? அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?

கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்? ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு. வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான  அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும். அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக. மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு. பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.

விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது? என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின? என்றே தெரியவில்லை.

பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம். மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ?. அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.  அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த  அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.

மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு. வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த  திமுக அரசு விரைவில் உணரும்”

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
Budget 2025CMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 TamilUpdatesTamil Nadu BudgetThangam thennarasuTN AssemblyTN Budget2025TN GovtTVKVijay
Advertisement