திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தொடங்கியது - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகள் நடைபெற்றது. இந்த நிலையில் தியாகராஜர் கோயிலில் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி நேற்று இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. அப்போது மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேரானது 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்டு பிரம்மாண்டமாக ஆடி அசைந்து 4 ரத வீதிகள் வழியாக வலம் வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதுதிலிருந்தும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தேரோட்ட நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு பணிக்காக 2,000 காவலர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தவிர இன்று நடைபெற இருந்த மற்ற அணைத்து தேர்வுகளும் நாளைய தினம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டது. தியாகராஜர் தேரை அடுத்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்பட உள்ளது. கீழரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து இன்று இரவு 7 மணி அளவில் நிலை அடியை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.