இலங்கை யாழ்ப்பாணத்தில் #Thiruvalluvar கலாச்சார மையம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"நமது அண்டை நாடான இலங்கையில், மத்திய அரசின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு’, திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நமது பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2015 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘யாழ்ப்பாணம் கலாச்சாரம் மையம்’ திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
பல்வேறு விதமான நவீன வசதிகளுடனும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உறவை குறிக்கின்ற வகையில் காட்சிபடுத்தப்பட்டுள்ள கல்வெட்டுகள் மற்றும் பழங்கால படிமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்திற்கு, தற்போது வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும், இரண்டு தேசங்களுக்கும் இடையிலான கலாச்சார உறவானது வலுப்பெறும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகின் தொன்மையான, இனிமையான மொழி தமிழ் என்பதை உலகம் முழுவதும் சென்று உரக்கச் சொல்லி வரும் பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்காக ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. அதுபோலவே திருக்குறளையும், திருவள்ளுவரின் புகழையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐநா சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப் படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
நமது அண்டை நாடான இலங்கையில், மத்திய அரசின் நிதியுதவி கொண்டு அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு’, உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த ‘தெய்வப்புலவர்’ அய்யன் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்… https://t.co/V1mwq23wCX pic.twitter.com/IssRR8isXp
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 19, 2025
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
கொடுத்த வாக்குறுதியின்படி உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். தற்போது இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது"
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.