#Kavaraipettai | விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : INDvBAN டி20 | சூர்யகுமார் யாதவ் – சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டம்…வங்கதேச அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
இந்த விபத்தில், 2 ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்திருந்தன. தடம் புரண்ட 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 7 பெட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில், ரயில் விபத்தில் தடம் புறண்ட அனைத்து பெட்டிகளும் அகற்றப்பட்டது.தற்போது தண்டவாளம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரயில் நிலையத்தில் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் முதன்மை தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதையடுத்து, ராஜதானி எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த பகுதியை கடந்து மெதுவாக சென்றது.