திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் - காவல்துறையை கண்டித்து பாமகவினர் தர்ணா!
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 12ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டன.
ஆனால் 11 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது பண்ண முடியாமல் காவல்துறை திணறி வருகின்றது. மேலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து குற்றவாளியின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் 11 நாட்களாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசாரை கண்டித்து பாமக மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் பேரணியாக சென்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தற்போது, பாமக மற்றும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்