1000 ஆண்டுகள் பழமையான திருவலிதாயம் சிவன் கோயில் குடமுழுக்கு - இன்று பந்தக்கால் நடப்பட்டது!
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் சிவன் கோயிலில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று பந்தக்கால் நடப்பட்டது.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடி பகுதியில் அமைந்துள்ளது
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் சிவன் கோயில். இக்கோயிலில் வரும் 23ஆம் தேதியன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, கலை சிற்பங்களுக்கு மெருகு ஊற்றப்பட்டு, கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான மகா யாகசாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக காலை முகூர்த்த நேரத்தில், பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மாங்கொத்து கட்டி கோயிலின் நுழைவாயிலில் பந்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் குமரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் வானவில் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.