திருத்துறைப்பூண்டி புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி கோலாகலம்!
திருத்துறைப்பூண்டி அருகே பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின்
திருவிழாவில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற
புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆலயத்தின் 42ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் இந்த ஆலயத்தில் தினந்தோறும் திருப்பலி நிகழ்ச்சி, கூட்டுப்பாடல்கள் நடைபெற்று வந்தன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதன்படி, மின் விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தோனியார் தேரானது ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஏராளமானோர் பிராத்தனையில் ஈடுபட்டனர்.