For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ThirupatiLaddu | “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” - மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்!

08:48 AM Sep 25, 2024 IST | Web Editor
 thirupatiladdu   “தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்”   மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்
Advertisement

திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.

Advertisement

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 96. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியை வைத்து புதிய திரைப்படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. அந்தவகையில், தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் (செப். 23) நடைபெற்றது. இந்நிகழ்வில், கார்த்தியிடம், ’உங்களுக்கு லட்டு வேணுமா?’ எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி ‘இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சிமிக்க விஷயம். தவிர்த்துவிடுவோம்” என கூறினார். இதனைக்கேட்ட அனைவரும் சிரித்தனர்.

இதனையடுத்து, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இதற்கு மன்னிப்பு கோரினார். அதில், “உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். வெங்கடேஸ்வரரின் பக்தனாக, பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன். வாழ்த்துகள்” என கார்த்தி பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பவன் கல்யாண் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “அன்புள்ள கார்த்தி, உங்கள் விரைவான பதில் மற்றும் நமது பொதுவான பாரம்பரியங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை நான் மனதார பாராட்டுகிறேன். திருப்பதி போன்ற நமது புனித தலங்கள் மற்றும் அதன் புனிதமான லட்டு ஆகியவை கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்புடையவை. இது போன்ற விவகாரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

எந்தவித உள்நோக்கங்களும் இன்றி நான் இதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவர விரும்பினேன். அதே போல அந்த சூழல் தற்செயலானதுதான் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். பிரபலங்களாக நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒற்றுமை மற்றும் மரியாதையுடன் நாம் அணுக வேண்டும். சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த மரபுகளை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.

அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். ’மெய்யழகன்’ படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement