திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோயிலில் ரூ.2 கோடியே 36 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வெளிப்பிரகாரமான வள்ளி தேவஸ்தான திருமண மண்டபம், சஷ்டி மண்டபங்களில் குண்டம் மற்றும் வேதிகை சார்ந்த 75 யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக கோயில் சிவாச்சாரியார்கள் மூலம் 7 கால யாகவேள்வி நடந்தது. மேலும் 7 பெண்கள் உள்பட 85 ஒதுவார் மூர்த்திகளால் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை, தமிழ் வேதபாராயணம் நடந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 8-ம் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தங்கம், வெள்ளி கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணியளவில் 7 நிலை கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இராஜகோபுரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். இதேபோல் கோயிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர் பின்னர் டிரோன் மூலம் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது
குடமுழுக்கையொட்டி இராஜகோபுரம் 16 கால் மண்டபம் மற்றும் மயில் மண்டபம் சுற்று வட்டார பகுதியில் இருந்து லட்சக்கனக்கான முருகபத்தர்கள் கும்பாபிஷேகத்தினை கண்டுகளித்தனர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக உணவுகள் வழங்கப்படுகிறது.