திருப்பரங்குன்றம் விவகாரம் : திமுக அரசு பொது மக்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது - எல்.முருகன்!
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "திமுக அரசாங்கம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலையை செய்திருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை, உயர் நீதிமன்ற உத்தரவை கூட செயல்படுத்தாமல் தூக்கிப் போட்டுள்ளார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழிபாடு செய்ய பொதுமக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி மனுவை கொடுக்கவில்லை, மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் 10 சிஐஎஸ்எப் வீரர்களுடன் இணைந்து தீபத்தை ஏற்ற உத்தரவிட்டது. ஆனால் அதையும் காவல்துறை செயல்படுத்த அனுமதிக்கவில்லை.
அந்த பகுதிக்கு யார் சென்றாலும் காவல்துறை கைது செய்கிறார்கள். பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் ஆகியோரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவ்வாறு ஒரு அராஜகத்தை நடத்தி விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு பாராளுமன்றத்தில் நாடகத்தை நடத்துகிறார்கள். ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்துவதற்கான எந்த உரிமையும் யாருக்கும் கிடையாது. உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட அதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு காட்டாச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்து மக்கள் வழிபாட்டு உரிமைக்காக செல்வதை எவ்வாறு தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறோம். காவல்துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு நடக்கும் திமுக அரசுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் மக்கள் உரிய விடை கொடுப்பார்கள். வழிபடுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. நீதிமன்ற உத்தரவையே மதிக்க மாட்டேன் என்ற ஒரு அராஜக போக்குடன் இருக்கும் அரசாங்கம் திமுக மட்டும் தான். மத்திய அமைச்சராக தமிழ்நாடு அரசுக்கு கூறுவது, இந்த விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொதுமக்களுக்கான அடிப்படை உரிமையை வழங்க வேண்டும். நீதித்துறை கொடுத்துள்ள நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். ஆனால் நீதித்துறையை மதிக்காமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பொது மக்களின் உரிமைகளை கேள்விக்குறி ஆக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.