திருப்பரங்குன்றம் விவகாரம் - சுமார் 50க்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்புக்காவல்!
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இன்று (பிப் .4) அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவுவதால், மதுரையில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு (163 BNSS) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. அதன்படி, இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் விஸ்வ ஹிந்து பரிஸ்த் பொறுப்பாளர் ஏ.எம் பாண்டியன், தனியார் விடுதிகளில் தங்கி இருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினரை மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பு காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர்.