#ADMK-க்கு திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்! காரணம் என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;
காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கள்ளச்சாரயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை களத்தில் சந்தித்த போது அவர்கள் வைத்த ஒரே கோரிக்கை, அரசு எங்களுக்கு இழப்பீடு தருவது முக்கியமல்ல; அரசு மதுபான கடைகளை மூட வேண்டும்; சாராயத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான்.
நல்ல சாராயம், கள்ள சாராயம் என்ற வாதமே கூடாது. முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் திமுக, அதிமுக, விசிக மற்றும் தமிழ்நாட்டில் பல கட்சிகள் ஒரு சேர இருக்கின்றன. அப்படி இருக்கையில் மது விலக்கை அமல்படுத்தாததன் காரணம் என்ன என்பதுதான் கேள்வி ? நல்ல சாராயத்தால், கள்ள சாராயத்தை ஒழிக்கலாம் என்பது ஏற்புடையதல்ல.
எந்த போதைப்பொருளும் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கள்ளுக்கடைகளையும் விசிக ஆதரிக்கவில்லை. அதிமுகவினரும் இந்த மாநாட்டிற்கு விருப்பம் இருந்தால் வரலாம். மற்ற கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பை கொண்டு வர நினைக்கும் அனைவரும் மேடையில் நிற்கலாம்.
தவெக-வின் முதல் மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பிரச்னைக்காக எந்த சக்திகளோடும் இணைவோம்.
தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்க பார்க்கிறார்கள். தனிநபராக எத்தனை மொழி வேண்டும் என்றாலும் கற்றுக் கொள்ளலாம். அது அரசு வழி திணிப்பாக இருக்கக் கூடாது. எனக்கு எந்த மொழி மீதும், எந்த மதத்தின் மீதும் வெறுப்புகள் கிடையாது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.