For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி!

06:16 PM Mar 02, 2024 IST | Web Editor
திமுக தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என திருமாவளவன் உறுதி
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கும் அதில் எந்த
மாற்றமும் இல்லை என  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார்.

Advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று (02.03.2024) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன்,
விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு
பாபு உள்ளிட்ட கட்சியின் உயர்நிலைக் குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

உயர்நிலைக் குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 7 அல்லது எட்டு கட்டங்களாக நடத்தும் முறையினை கைவிட்டு
இந்திய அளவில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் பொதுத்தேர்தலை நடத்த
வேண்டும். அதற்கு ஏற்ப தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல்
ஆணையத்தை விசிக வலியுறுத்துகிறது. வாக்குப்பதிவு நடப்பதற்கும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கும் இடையிலான காலத்தை அதிகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கேற்ப வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை அறிவிக்க வேண்டும்.

மின்னணு வாக்கு பதிவு எந்திரத்துடன் 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை இணைக்க
வேண்டும். ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணி அதன் அடிப்படையில் தேர்தல்
முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டு இருந்த
சாந்தன், ஜெயக்குமார், முருகன், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் தமிழ்நாடு அரசின்
பெரு முயற்சியால் உச்சநீதிமன்றத்தால் விடுதலை பெற்றனர். அதன் பின்னர் அவர்கள்
தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்கவில்லை. அதனால் சிறை
போன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். உடல் நலக்குறைவால் சாந்தன்
மரணம் அதிர்ச்சி அளித்தது. இந்த மரணத்திற்கு மத்திய அரசுதான் காரணம் என்று
விசிக கருதுகிறது.

இன்றைக்கு 12 மணியளவில் தேர்தல் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழுவினரோடு
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இசைவளித்து இருந்தேன். உயர்நிலைக் குழு
கூட்டம் முடிவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் திமுக குழுவில் உள்ள முக்கிய
தலைவரை தொடர்பு கொண்டு உயர்நிலைக் குழு கூட்டம் நிறைவு செய்ய நேரமாகும் ஆகவே இன்றைக்கு வர இயலாமைக்கு வருந்துகிறோம் என்று தகவல் தெரிவித்துள்ளோம்.

ஓரிரு நாட்களில் மீண்டும் உரிய நேரத்தை ஒதுக்கீடு செய்து பேச்சுவார்த்தையில்
பங்கேற்போம். முதல்வரை சந்திப்பதற்கு தேவை ஏற்பட்டால் சந்திப்போம். இரண்டு தனி தொகுதி ஒரு பொதுத் தொகுதி என மூன்று தொகுதிகளை கேட்டு பெறுவது நலம்
பயக்கும் என்று உயர்நிலைக் குழுவில் கருத்துக்கள் பகிரப்பட்டது. திமுக கூட்டணியில் கொள்கை புரிதலோடு இயங்கிக் கொண்டிருக்கிற கட்சிகள் தான் உள்ளது. இந்த கூட்டணியில் எந்த குழப்பமோ அவசரமோ பதற்றமோ கிடையாது.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் தான் விசிக பயணிக்கும். இதில் எந்த விதமான இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை. காங்கிரஸ் தலைமையில் தான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை முன்னிருந்து நடத்தியதில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

திமுக கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் அதன் மூலம் கூட்டணியை பிரிக்கலாம் என யாரும் கனவு காண வேண்டாம். அது இலவு காத்த கிளியாகவே அவர்களது கனவு பலிக்காமல் போகும். விசிகவின் உழைப்பு, வலிமை,பங்களிப்பு, கொள்கை பிடிப்பு என அனைத்தையும் திமுக தலைவர் நன்கு அறிவார். எனவே பரஸ்பர உடன்பாடு ஏற்படும், இந்த கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை அமைதியாக இருப்பதால் திமுக கூட்டணி பேச்சு வார்த்தை பெரிதாக பேசப்படுகிறது.

Tags :
Advertisement