திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழா - அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு!
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் மாசி குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்திபெற்ற சின்ன ஓங்காளியம்மன் மாசி
குண்டம் திருவிழா பிப்.16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த மாசி குண்டம் திருவிழா 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதனிடையே குண்டம் இறங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!
இதையடுத்து காப்பு கட்டிய பக்தர்கள் மலையடி குட்டையில் இருந்து ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தீர்த்தமெடுத்து வந்தனர். தீர்த்தமாக எடுத்து வந்த புனித நீரைக்கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தனர். மேலும், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், பூச்சொரிதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி பிப்.27 ஆம் தேதி நடக்க உள்ளது. பின்னர் சின்ன ஓங்காளியம்மன் திருவீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.