வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் | 3 நாட்களாக இருளில் மூழ்கிய திருச்செந்தூர்...
3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறியும், அதிகாரிகள் உரிய பதிலளிக்கவில்லை என திருச்செந்தூர் நகராட்சி பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் பெரும் சிரமத்திற்குள்ளானர். வெள்ளத்தால் பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் மூழ்கினர். பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜூவா நகர், வெய்யிலுகந்தம்மன் கோவில் தெரு, பட்டர்குளம் தெரு, தெப்பக்குளம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
கைக்குழந்தைகளுடன் இரவு நேரத்தில் தூங்கமுடியாமல் தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறியும், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.